கிரிக்கெட் என்பது எவ்வளவு ஆபத்தான விளையாட்டு என்பதற்கு மற்றொரு உதாரணம் இச்சம்பவம்.
ஆஸ்திரேலியா உள்ளூர் போட்டித் தொடரான மார்ஷ் ஒருநாள் தொடர் (Marsh One-Day Cup) நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும், சவுத் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், வெஸ்ட்ரன் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த ஆஷ்டன் அகர் கேட்ச் பிடிக்க முயன்ற போது, பந்தை தவறவிட்டதால், பந்து அவரது கண்ணாடியை உடைத்து, இரண்டு கண்களுக்கும் இடைப்பட்ட பகுதியை பலமாக தாக்கியது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆஷ்டனுக்கு அடிப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வழிய, சக வீரர்கள் அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.
இதில் வேதனைக்குரிய சுவாரஸ்ய விஷயம் என்னவெனில், பந்தை அடித்தது, ஆஷ்டன் அகரின் சகோதரர் வெஸ் அகர். தனது சகோதரரின் கேட்சை பிடிக்கப் போய் தான் இந்த விபரீதம் நடைபெற்றது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷ்டனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமான எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
கடந்த 2014ம் ஆண்டு, ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் விளையாடிய சர்வதேச ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்ஸ் பந்தை எதிர்கொண்ட போது, பந்து தலையை தாக்கி உயிரிழந்த சம்பவத்தை நம்மால் மறக்க முடியுமா!!