சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் பேட்டியளித்துள்ளார்.
மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம் அளிக்கப்படுவதில்லை. இளம் சுழற்பந்து வீச்சாளர்களான, மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் இனி அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிகிறது.
இந்நிலையில் அஸ்வின், ஜடேஜா குறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஒரு பேட்டியில் கூறியதாவது:
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை வைத்து அவர்களை ஒருநாள் அணியிலிருந்து நீக்கவில்லை. அணியில் சுழற்பந்துவீச்சுப் பிரிவில் மாற்று வீரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த எண்ணினோம். இப்போது எப்படி நம்மிடம் நிறைய தொடக்க வீரர்கள் உள்ளோர்களோ அதுபோல. நம் நடுவரிசையைப் பலப்படுத்தியுள்ளோம்.
ஏராளமான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். இதுபோல ஒவ்வொரு பிரிவிலும் மாற்று வீரர்களை ஏற்பாடு செய்தோம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தோம். அதை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். எனவே அவர்களுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.
அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் இடம்பெறமுடியும். அவர்களைச் சேர்க்கமாட்டோம் என்கிற எவ்விதமான விதிமுறைகளும் இல்லை. அவர்கள் இந்திய அணிக்காக நிறைய சாதித்துள்ளார்கள். எனவே அவர்கள் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புண்டு.
இளம் வீரர்களுக்கு இப்போது நிறைய வாய்ப்பளிக்கிறோம். அவ்வளவுதான். முக்கியமான் அணிகளுடன் அவர்கள் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.