கிட்டத்தட்ட 50 ஓவர்களாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வந்த இந்திய அணிக்கு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்திருந்தது. கவாஜா 104 ரன்கள், கிரீன் 49 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அபாரமாக விளையாடி வந்தது. கவாஜா 150 ரன்களும், அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிவந்த கேமரூன் கிரீன் 95 ரன்களுக்கும் அடித்து வரை களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி 347 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது.
உணவு இடைவேளைக்கு பின்பு வந்த இந்திய அணி, ட்ரிங்க்ஸ் பிரேக் வரும்வரை விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் மிகவும் திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான நிலைக்கு ஆஸ்திரேலியா அணி சென்றது. கேமரூன் கிரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகும் இவர் நிற்கவில்லை. அதிரடியாக விளையாடி வந்தார்.
அந்த சமயத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை நிறுத்திவிட்டு ஸ்பின்னர்களை இறக்கினார் ரோகித் சர்மா. இந்த நகர்வு இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. கிட்டத்தட்ட 50 ஓவர்களாக நீடித்துவரும் இந்த பாட்னர்ஷிப்பை உடைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் 114 ரன்கள் ஆட்டம் இழந்தார்.
அதே ஓவரில் புதியதாக உள்ளே வந்த அலெக்ஸ் கேரி விக்கெட்டையும் அஸ்வின் எடுக்க, மெதுவாக ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது.
இக்கட்டான சூழலில் இந்திய அணி இருந்தபோது, முக்கியமான கட்டத்தில் உள்ளே வந்து அனுபவத்தை பயன்படுத்தி விக்கெட் எடுத்துக் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் மீண்டும் தனது அபாரமான பங்களிப்பை அஸ்வின் கொடுத்து வருகிறார்.