இப்போல்லாம் 3வது அம்பயர் எங்கங்க ஒழுங்கா பாக்றாங்க.. ரிவியூக்கே ரிவியூ எடுத்தது ஏன்? – நச்சுன்னு விளக்கம் கொடுத்த அஸ்வின்!

டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின்.

ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவுற்றவுடன் தமிழகத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 13ஆவது ஓவரை வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த திருச்சி அணியின் பேட்ஸ்மேன் ராஜ்குமார் அடித்த பந்தை பிடித்த கீப்பர் அவுட் கேட்டார். அதற்கு களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார்.

உடனடியாக பேட்ஸ்மேன் நடுவரின் முடிவுக்கு ரிவியூ எடுத்தார். மூன்றாவது நடுவர் சோதித்துப் பார்த்ததில் பந்து பேட்டில் படவில்லை என்று தெரிந்தது அதற்காக நாட் அவுட் என்று அறிவித்துவிட்டார். உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருமுறை ரிவியூ எடுத்து அப்போதும் நாட்-அவுட் வந்தது.

ஒரே பந்திற்கு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவரும் ரிவ்யூ எடுத்த சம்பவம் முதல் முறையாக டிஎன்பிஎல் தொடரில் நிகழ்ந்தது. இதற்காக அஸ்வின் பல்வேறு கிண்டல்களையும் சந்தித்து வருகிறார். போட்டி முடிந்த பிறகு எதற்காக ரிவியூ எடுத்தேன்? என்பதையும் அவர் பேசியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியதாவது:

“பந்து பேட்டில் பட்டது போல தெரிந்தது. அதேபோல் மூன்றாவது நடுவர் சில நேரங்களில் சில கோணங்களில் மட்டுமே பார்த்துவிட்டு முடிவுகளை கூறி விடுகிறார். எனக்கு ஸ்பைக் சிறிதளவு தெரிந்தது. அது வேறொரு கோணத்தில் இன்னும் தெளிவாக பார்த்தால் தெரியும் என நினைத்தேன்.

ஆகையால் மீண்டும் ஒருமுறை ரிவியூ எடுத்தால் 3ஆம் நடுவர் வேறொரு கோணங்களில் இருந்து பார்த்து உரிய முடிவுகளை அளிப்பார்கள் என்று நினைத்தேன். மூன்றாவது நடுவர்களின் முடிவுகளை ஒரு புறம் மட்டுமே பார்த்து உறுதியாக நம்பிவிட முடியாது அல்லவா?.” என்கிற பாணியில் சிரித்தபடியே நகர்ந்தார் அஸ்வின்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில்லுக்கு 3ஆம் நடுவர் அளித்த அவுட் எனும் முடிவு பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதனை தான் அஸ்வின் சூசகமாக குறிப்பிட்டு பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.