வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இதை செய்தால் போதும். ஜாம்பவான் பட்டியலில் இணையலாம்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. முதல் கட்டமாக, நடந்து முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனை அடுத்து, நவம்பர் 14ஆம் தேதி துவங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தூர் டெஸ்ட் போட்டியில், சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினால், இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார்.
இதுவரை இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் 350 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே இருக்கிறார். 265 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன்சிங் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
தற்போது வரை இந்திய மண்ணில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், இந்த ஜாம்பவான்களின் பட்டியலில் இடம் பெற்று, இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை சொந்தமாக்குவார்.
முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி..
இந்திய வீரர்களின் பயிற்சியை பார்க்கையில், பிங்க் பந்து டெஸ்ட் போட்டி (2வது டெஸ்ட்) முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ஓரிரு நாட்களிலேயே வரவிருப்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் பகல் நேர பயிற்சியை முடித்துவிட்டு மாலை நேரங்களில் 5 மணி முதல் 6 மணி வரை இந்திய வீரர்கள் பிங்க் பந்தைக் கொண்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் மாலை நேரங்களில் இருக்கும் பனிப் பொழிவை சமாளிக்க இது போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.