இது பந்துவீச்சாளர்களுக்கான வெற்றி;ரோஹித் சர்மா நெகிழ்ச்சி
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே மிக முக்கிய காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
துபாயில் கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 47 ரன்களும், சோயிப் மாலில் 43 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 52 ரன்களும், ஷிகர் தவான் 46 ரன்களும் எடுத்து அபார துவக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த அம்பத்தி ராயூடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்ததன் மூலம் 29வது ஓவர் முடிவிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த அபார வெற்றிக்கு பந்துவீச்சாளங்கள் மிக முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது, கடந்த போட்டியில் செய்த தவறுகளில் இருந்து சில பாடங்கள் படித்து கொண்டோம் பாகிஸ்தான் அணியுடனான இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர், இந்த வெற்றியில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. பந்துவீச்சிற்கு சாதகமாக ஆடுகளம் இல்லாத போதிலும் எங்கள் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கேதர் ஜாதவ் இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதும் தனக்கு கிடைக்கின்ற வாய்ப்பை தவறவிட மாட்டார். தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பத்தி ராயூடுவும் சூப்பராக போட்டியாக நிறைவு செய்து கொடுத்தனர்” என்றார்.