இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு… ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா; மாற்று வீரரை உடனடியாக அறிவித்த பிசிசிஐ !!

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

துபாய் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிரட்டல் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் போன்ற சவாலான அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தனது அடுத்த போட்டியில் விளையாட உள்ள நிலையில், முக்கிய வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரவீந்திர ஜடேஜாவிற்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவரால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். ஜடேஜாவை மருத்துவ குழுவினர் கண்கானித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. அதே போல் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ., தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான வீரர்கள் வரிசையில் ஒருவராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

Mohamed:

This website uses cookies.