இந்திய அணியில் நிறைய பிரச்சனை இருக்கு… உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்கு தான்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல பாகிஸ்தான் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.
இந்த முறை இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி நிறைவடைய உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் பலர் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப், பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரசீத் லத்தீப் பேசுகையில், “இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. பாகிஸ்தான் அணியிலும் சில பிரச்சனைகள் உள்ளது. பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் பெரிதாக இல்லை. அதே போல் பவர்ப்ளே ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் சிறப்பாக செயல்பட முடியும், ஆனால் மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் பெரிதாக சோபிக்க முடியாது என்றே கருதுகிறேன். அதே வேளையில் இந்திய அணியை எடுத்து பார்த்தால் இந்திய அணியில் பல பிரச்சனைகள் உள்ளது. இந்திய அணி முழுமையாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை நம்பியே உள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் எங்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விட சிறந்தவர்களாக இருந்தாலும், மிடில் ஆர்டர் பிரச்சனை இந்திய அணியில் பெரிய பிரச்சனையாக உள்ளது. பந்துவீச்சிலும் சில குறைகள் உள்ளது. இதன் காரணமாகவே சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணியை விட பாகிஸ்தான் அணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.