இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் அஷ்டோன் அகர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.
சிட்னி ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் ஆஸ்திரேலியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன விளையாட உள்ளது. ஏற்கனவே, நாதன் லயன் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக அஷ்டோன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கலந்து கொண்டார். அப்போது அவரது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் உடனடியாக சொந்த நாடு திரும்பினார். தற்போது சர்வதேச அணிக்கு திரும்பியுள்ளார்.
அஷ்டோன் அகர் அணியில் சேர்க்கப்பட்டதால் மிட்செல் மார்ஷ் அல்லது ஜேக்சன் பேர்டு ஆகியோரின் ஒருவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.