இந்தூரில் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3-வது போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்புகிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது பவுண்டரி கோடு அருகில் பீல்டிங் செய்த சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் வலது கையின் சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் நேற்றைய போட்டியில் தொடர்ந்து பந்து வீசினார். ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போடடிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இதனால் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்புகிறார்.
‘‘நேற்றைய போட்டி முடிந்த பின்னர் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக ஆஸ்திரேலியா செல்லும் ஆஷ்டன் அகர், வல்லுனர்களுடன் ஆலோசனைப் பெறுகிறார். பெரும்பாலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஷ்டன் அகருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது போட்டி வரும் 28-ந்தேதி பெங்களூருவிலும், 5-வது போட்டி அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரிலும் நடக்கிறது.
போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், ’நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆரோன் பிஞ்ச் பிரமாதமாக ஆடி சதமடித்தார். 37-38 ஓவர் வரை சிறப்பாக ஆடிய நாங்கள் பிறகு அதை தக்க வைக்கத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக செயல்பட்டனர்.
நாங்கள் 330 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால் போட்டியின் தன்மை மாறியிருக்கும். அதே நேரம் ஹர்திக் பாண்ட்யா, சிறப்பாக விளையாடி போட்டியை அற்புதமாக மாற்றிவிட்டார்.’ என்றார்.
’ஆஸ்திரேலிய வீரர் அஸ்டன் அகார் சுழல் பந்தை பதம் பார்க்க வேண்டும் என்று நினைத்தே ஆடினேன். அதில சில சிக்சர்கள் கிடைத்தது’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் பாண்ட்யா கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 78 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.