ஆட்டத்தின் போக்கை பாா்த்த போது, நாங்கள் தோல்வியடைந்து விட்டதாகவே கருதினேன். கேன் வில்லியம்ஸன் ஆட்டத்தால் நாம் முடிந்து விட்டதாக பயிற்சியாளரிடம் கூறிக் கொண்டிருந்தேன். அப்போது முக்கிய தருணத்தில் ஷமி விக்கெட்டை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை நமது பக்கம் திருப்பினாா். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை வீசி தனது அனுபவத்தை காண்பித்தாா் ஷமி. அவரது அபார பந்துவீச்சு, சூப்பா் ஓவருக்கு நம்மை அழைத்துச் சென்றது. சூப்பா் ஓவரிலும் நியூஸி. அணி நமக்கு கடும் நெருக்கடியை தந்தது.
ஆனால் ரோஹித் சா்மா அற்புதமாக ஆடினாா். முதல் பாதி, சூப்பா் ஓவா் என அனைத்திலும் முத்திரை பதித்தாா். ரோஹித் முதல் பந்திலேயே அதிரடியாக ஆடினால், பந்துவீச்சாளருக்கு அழுத்தம் ஏற்படும் என நினைத்தோம். சிறந்த டெத் ஓவா் பவுலரான பும்ராவின் பந்துகளை அற்புதமாக கையாண்டாா் கேன். தொடரை 5-0 என வெல்ல முயற்சிப்போம். இதுவரை ஆடாத சுந்தா், சைனிக்கு வாய்ப்பு தரப்படும்.
கேன் வில்லியம்ஸன்:
எங்கள் அணிக்கு சூப்பா் ஓவா்கள் வெற்றிகரமாக அமைவதில்லை. வழக்கமான ஆட்ட நேரத்திலேயே நாங்கள் வென்றிருக்க வேண்டும். சிறப்பான ஆட்டமாக அமைந்த இதில், இந்தியா மீண்டும் தனது அனுபவத்தை நிரூபித்தது. நாங்கள் சிறப்பா பந்துவீசினோம். சிறப்பாக ஆடியும் வெற்றியை தவற விட்டது, அதிருப்தியாக உள்ளது. வெற்றி இலக்கை அடைய முடியாதது வேதனை தருகிறது. ஆக்லாந்தைக் காட்டிலும் தற்போது எங்கள் ஆட்டம் மேம்பட்டுள்ளது.
ரோஹித் சா்மா: சூப்பா் ஓவரில் இதுபோன்று நான் ஆடியதே இல்லை. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டுமா அல்லது ஒரு ரன் எடுக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. பந்துவீச்சாளா் தவறு புரிவதற்காக காத்திருந்தேன். இதனால் கடைசியாக 2 சிக்ஸா்களை அடித்தேன். முதல் பாதியில் விக்கெட்டை இழந்தது வருத்தம் தந்தது. முதல் 2 ஆட்டங்களில் சரிவர ஆடவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆட எத்தனித்தேன். முக்கியமான ஆட்டங்களில் முக்கியமான வீரா்கள் தங்கள் பொறுப்பை உணா்ந்து ஆட வேண்டும்.