பந்தைச் சேதப்படுத்த முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்திய விதத்தில் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் மூவர் கூட்டணி பொறுப்பற்ற முறையில் பெரிய தவறிழைத்திருக்கலாம் ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த ஒட்டுமொத்த விவகாரத்தைக் கையாண்ட விதம் சரியல்ல என்று ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
ஐசிசி விதிமுறைகளை விடவும் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று வீரர்கள் அமைப்பு சாடியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் கூறும்போது, தடை உத்தரவுகள் வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் இந்தத் தண்டனையை அளிப்பதற்குக் காரணமான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விசாரணை நடைமுறையில் ஏகப்பட்ட குழப்பங்கள், ஒழுங்கின்மைகள் இருக்கின்றன. அதாவது இவ்வளவு கடுமையான தண்டனைகளை அறிவிக்க மேற்கொண்ட விசாரணை நடைமுறைகளில் ஒழுங்கின்மைகள் உள்ளன.
இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் செயல் ஸ்மித், வார்னருக்கு புதிதல்ல, இருவரும் பல போட்டிகளில் வழக்கமாக வைத்துள்ளனர் என்று போட்டி நடுவரும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான டேர்ல் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டின் தன்மைக்கு அளிக்கும் நிலை மற்றும் தடைகளை விட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டு நிலை மற்றும் தடைகள் அதிகபட்சமாக உள்ளன.
பந்தின் மீது செயற்கையான பொருட்களைத் தடவுவது உள்ளிட்ட பால் டேம்பரிங் விவகாரத்தில் இதற்கு முன்னால் கேப்டன்கள் உட்பட சிலர் இதில் சிக்கிய தருணங்களில் உலக கிரிக்கெட்டில் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கும் இப்போதைய தண்டனைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை செயலில் ஈடுபடுத்தியது (ஏன்?)
இதுகாறும் வெளிவந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அறிக்கை ஒன்றில் கூட தென் ஆப்பிரிக்காவில் வீரர்கள் எதிர்கொண்ட சூழல் என்ன, அது எப்படி இவர்கள் நடத்தையில் பிரதிபலித்தது, இதற்கான காரணிகள் என்ன போன்ற நுட்பங்கள் எதுவும் இல்லை.
பர்சீலிக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு அறிவுரை இல்லாமல் கடந்த சனியன்று வீரர்களை உலக ஊடகங்களின் முன்னால் அவசர அவசரமாக நிறுத்தியது, என்று வீரர்கள அமைப்பு ஏகப்பட்ட பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
மேலும் வார்னர், ஸ்மித், பேங்க்ராப்டுக்குத் தேவைப்படும் அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம் என்று வீரர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டில் வீரர்கள் தங்கள் சார்பாக எத்தனை சாட்சிகளை வேண்டுமானாலும் நிறுத்தலாம் சட்ட ரீதியான பிரதிநிதித்துவமும் உண்டு.