அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் 350 ரன்களுக்கு மேல் அடித்து இந்தியாவிற்கு எதிராக புதிய சாதனை படைத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்த சாதனையின் முதல் முழு விவரத்தை தற்போது காண்போம்.
இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்திருந்தனர். இந்தப்போட்டியில் ஸ்மித் மற்றும் பின்ச் இருவரும் சதம் விளாசி இருந்தனர். அப்போது இந்த 374 ரன்கள், ஒருநாள் அரங்கில் இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அடுத்ததாக இன்று நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டி அதே சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியைப் போலவே இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். அவர்களை விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஸ்மித் விளங்கினார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் விளாசினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு முதலில் இறங்கிய 5 வீரர்களும் அரைசதம் கடந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 389 ரன்கள் குவித்தது. சென்ற போட்டியில் செய்த சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது
அதேபோல் இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் அரங்கில் ஒரு போட்டியில் 5 வீரர்கள் அரை சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னரும் இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியே நிகழ்த்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.