இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்கு 390 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மீண்டும் ஒருமுறை டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.
முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பின்ச் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள் சேர்த்தது. பின்ச் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் நன்கு ஆடிவந்த வார்னர் 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, விக்கெட்டை இழக்காமல் கிட்டத்தட்ட 140 ரன்கள் சேர்த்தனர். இதில் ஸ்மித் அபாரமாக விளையாடி இந்த போட்டியிலும் சதம் விளாசினார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இவர், இந்த போட்டியில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். லபுச்சேன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த மேக்ஸ்வெல் முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் தனது அதிரடியை வெளிப்படுத்தி வெறும் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய முதல் 5 பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடித்து இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சமி, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரில் பின்தங்கி இருக்கிறது. இன்றைய போட்டியிலும் தோல்வியை தழுவினால் தொடரை இழக்க நேரிடும். ஆகையால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இந்திய அணி உள்ளது.