வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் 5 டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டி.20 தொடரின் முதல் போட்டிகளிலும் விண்டீஸ் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
டேரன் சமி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஸ் 75 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 53 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 189 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ் 72 ரன்களும், ஈவன் லீவிஸ் 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால் விண்டீஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.
களத்தில் இருந்த ஆண்ட்ரியூ ரசல் மற்றும் பேபியன் ஆலன் 19வது ஓவரில் 25 ரன்கள் எடுத்தனர், 19வது ஓவரின் கடைசி பந்தில் பேபியன் ஆலன் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி ஒரு ஓவருக்கு விண்டீஸ் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
களத்தில் ஆண்ட்ரியூ ரசல் இருந்ததால் விண்டீஸ் அணி அசால்டாக வெற்றி பெற்றுவிடும் என கருதப்பட்டது, ஆனால் கடைசி ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் தான் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக கடைசி ஓவரின் முதல் நான்கு பந்திலும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க கடுமையாக திணறிய ரசல், ஐந்தாவது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்ததன் மூலம் 185 ரன்கள் மட்டுமே எடுத்த விண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
கடைசி ஓவரை மிக சிறப்பாக வீசிய மிட்செல் ஸ்டார்கிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.