இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் மூலம் தங்களுக்கு கிடைத்த அனைத்து பரிசு தொகைகளையும் தொடர் பிரச்சனைகளால் பரிதவித்து வரும் இலங்கை மக்களுக்கு கொடுப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கை மக்கள் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் இலங்கைக்கு சுற்றுப்பயணன் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இலங்கை அணியும் கைப்பற்றியது. கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை குழந்தைகளுக்கும், ஏழை குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உதவ முன்வந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தொடரில் ஆடியதில் கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் அப்படியே இலங்கையில் இருக்கும் UNICEF-க்கு வழங்குவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் UNICEF தூதருமான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் கொரோனாவின் கோரதாண்டவத்தால் ஆக்ஷிஜன் இல்லாமல் அவதிப்பட்ட போது, பேட் கம்மின்ஸ் முதல் ஆளாக இந்தியர்களின் ஆக்ஷிஜன் தேவைக்காக 50,000 அமெரிக்க டாலர்களை அள்ளி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.