ஆஸ்திரேலிய அணியின் இந்த அசிங்கத்திற்கு காரணம் இது தான்; ஹசீல்வுட் சொல்கிறார்
களத்தில் பால் டேம்பரிங் உட்பட ஸ்லெட்ஜிங் போன்றவற்றில் ஈடுபடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த எண்ணம் ஏற்படக் காரணம் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கமே என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் குற்றம்சாட்டியுள்ளார்.
நடத்தையில் ஆஸி. அணியினர் முன்னேறவேயில்லை என்பது ஆஷஸ் தொடரிலும், தென் ஆப்பிரிக்க தொடரில் லெஜண்ட் ஏ.பி.டிவில்லியர்ஸை மோசமாக நேதன் லயன் வழியனுப்பியதிலும் பிரதிபலிக்கவே செய்தது. இதன் உச்சகட்டமாக எப்படி மோசடி செய்தாவது ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் பால் டேம்பரிங்குக்கு இட்டுச்சென்று இன்று ஆஸ்திரேலிய அணி பெருத்த அவமானத்தையும், தலைகுனிவையும் சந்தித்துள்ளது என்கிறார் ஜோஷ் ஹேசில்வுட்.
“தென் ஆப்பிரிக்கா ஒரு பெரிய தொடர், அதுவும் ஆஷஸ் தொடருக்குப் பிறகு வருகிறது, அனைத்து பெரிய தொடர்களும் மன அழுத்தத்தைக் கொடுப்பவை. இதில் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற அழுத்தத்தை நாங்களே எங்கள் மீது சுமத்திக் கொள்கிறோம்.
எங்களது திறமையை அளவிடுவது வெறும் வெற்றிமட்டுமே என்பதால்தான் களத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக வித்தியாசமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. இப்போது இந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளது. ஜஸ்டின் லாங்கர் களத்துக்கு வெளியே நாங்கள் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது பற்றி நிறைய பேசினார். இதை வைத்துத்தான் அளவிடப்படும் என்று அவர் கூறினார், இது நல்ல அறிகுறி.
நாங்கள் பால் டேம்பரிங் விவகாரத்தின் போது இரவு படுக்கச் சென்றோம், காலையில் எழுந்து பார்த்தால் இது மிகப்பெரிய சர்ச்சையானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம், ஊடகங்கள் விஷயத்தைக் கையில் எடுத்து பிரித்து மேய்ந்து விட்டனர், குறிப்பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள். இதற்கான எதிர்வினை மிகப்பெரியது, எங்களுக்கு அச்சமூட்டக்கூடியவையாக இருந்தது.
பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து நேரடியாக கிரிக்கெட் களம் மற்றபடி வெளி உலகம் என்னவென்று தெரியாமல் வளர்ந்து விட்டோம், கிரிக்கெட் மட்டுமே தெரிந்த ஒன்று என்பது எப்போதும் நல்லதல்ல, அதனால்தான் இந்தத் துயரம் ஏற்பட்டது. இப்போது மாறிவருகிறது” என்றார் ஹேசில்வுட்.