விக்கெட் கீப்பரை வலை வீசி தேடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
தொடர்ந்து பல சோதனைகள் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தொடருக்கு சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்து வருகிறது.
கிரிக்கெட் உலகின் வல்லரசாக அறியப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபகாலமாக தொடர்ந்து கடுமையாக அசிங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதால் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒரு ஆண்டு தடை செய்யப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 34 வருடங்கள் இல்லாத வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐ.சி.சி.,யின் ஒருநாள் தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இப்படி பல சோதனைகளை தொடர்ந்து சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்து வருகிறது. மேலும் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறியதாவது, “2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ஒரு சிறந்த அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளும், ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.