ரஹானே வேண்டாம் ரோஹித் சர்மா போதும்; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குவதையடுத்து, அதிரடி வீரர் பிரித்வி ஷா காயம் காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது இந்திய அணிக்கு சற்றே பின்னடைவுதான் ஏனெனில் ஷிகர் தவணைக் கொண்டு வருவது பெரும் தவறாகிவிடும். முரளி விஜய் பேட்டிங் இந்திய பிட்ச்களைத் தவிர வேறு இடங்களில் எழும்பவில்லை.
ராகுல் பேட்டிங்கும் சந்தேகமாக உள்ள நிலையில் இந்திய அணிக்கு தேர்வுக்குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கே.எல்.ராகுலைத் தூக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது, அவருடன் பார்த்திவ் படேல் இறக்கப்பட வாய்ப்புள்ளது. பார்த்திவ் படேல் கொஞ்சம் குறுக்கு மட்டை பேட்டிங் ஷாட்களை ஆடக்கூடியவர் அங்கு அது பயனளிக்கும். மேலும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் கொஞ்சம் அனுபவமிக்கவர். பல கருத்துகள் யோசனைகள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கிரிக்கெட் மந்த்லி டாட் காமிற்காக நடந்த விவாதத்தில் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மென் ரன்கள் எடுக்கிறார்கள் ஏனெனில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தைக் காட்டிலும் ஆஸி.யில் பந்துகள் நேர் திசையில் வரும். ஆனால் இங்கும் கூட கோலியின் பேட்டிங் வரைபடம்தான் உச்சத்தில் இருக்கிறதே தவிர மற்ற வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இது பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளினால் அல்ல என்பதே.
விஜய் பொறுமை ரீதியாக பழைய வீரர் இல்லை, குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில். ராகுல் ஒரு புதிராக இருக்கிறார் எனக்கு. உயர்தர பேட்ஸ்மென் ஆனால் அவரைப்போல் டைமிங்கை ஒருவரும் இழக்க முடியாது. இங்கிலாந்தில் அவர் தடுமாறியது ஆச்சரியமாக இருந்தது. இந்திய பேட்டிங் பிட்ச்களிலும் கூட அவரது டைமிங் சரியாக இல்லை. எனவே ஆஸ்திரேலியாவுக்கு அவர் ஒரு நல்ல பேட்ஸ்மெனாக இப்போது வரவில்லை, பொறுமை என்ற அளவிலும் உத்தி என்ற அளவிலும் அவர் நல்ல பேட்ஸ்மென் என்ற நிலையிலிருந்து சற்றே கீழே இறங்கிவிட்டார்.
புஜாராவிடம் மன உறுதி இருக்கிறது, இதனால் கடினமாகப் போராடி இந்தத் தொடரிலும் ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அஜிங்கிய ரஹானே 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வீரர் அல்ல. அவரது கருத்துகள், அவரது பேச்சுக்கள் எதிலும் அவர் தன் பேட்டிங்கில் ஏதோ ஒன்று தவறாகப் போய்விட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்வதே இல்லை. அதனால்தான் அவர் ஒரு பேட்ஸ்மெனாக அவர் மாறுவார் போல் தெரியவில்லை. செய்த தவறுகளையே அவர் செய்கிறார்.
அதனால்தான் ரோஹித் சர்மா ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இது ஒரு பெரிய தந்திரம்தான், ஆனால் செய்து பார்க்கலாம். நம்பர் 6-ல் அவர் இறங்கி கீழ்வரிசை வீரர்களுடன் ஆடி இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் செய்வதை ரோஹித் இங்கு செய்ய முடியும். அவர் டெஸ்ட்டில் பார்முக்கு வந்து விட்டால் அவர் போட்டியையே மாற்றும் திறம் படைத்தவர். ஆகவே ரோஹித் சர்மாவை லெவனில் எடுக்க வேண்டும்” என்றார்.