எந்த இடத்துல இறங்கினாலும் ஹிட்மேன் ஹீரோ தான்; முன்னாள் வீரர் ஆதரவு !!

எந்த இடத்தில் களமிறங்கினாலும் ரோஹித் சர்மாவால் சிறப்பாக விளையாட முடியும் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் ஒருநாள் மற்றும் டி.20 அணியை வழக்கம் போல் வழிநடத்த இருக்கும் விராட் கோஹ்லி, டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு பிறகு இந்தியா திரும்ப உள்ளார். கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கோஹ்லி ஜனவரி மாதம் இந்தியா திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.

அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, கோஹ்லி இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல் டெஸ்ட் தொடரில் கே.எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்குவாரா இல்லை ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவாரா என்ற விவாதமும் கடந்த இரு தினங்களாகவே நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இது குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், எந்த இடத்திலும் களமிறக்கினாலும் ரோஹித் சர்மாவால் சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராட் ஹாக் கூறுகையில், “விராட் கோஹ்லி இல்லாவிட்டால் ரோஹித் சர்மாவிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்படும். விராட் கோஹ்லி டெஸ்ட் தொடரில் இருந்து விலகினால் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் களமிறங்குவார் என நினைக்கிறேன், விராட் கோஹ்லி இல்லாமல் நடைபெற இருக்கும் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா 4வது இடத்தில் களமிறங்கினால் அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன். நான்காவது இடத்தில் களமிறங்கினால் அவரால் சதம் அடிக்க முடியும், மூன்று போட்டியிலுமே அவர் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். இந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பார்க்க போகிறோம்” என்று தெரிவித்தார்.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல;

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “நான் எப்பொழுதும் அனைவரிடமும் சொல்வதை தான் இப்பொழுதும் சொல்கிறேன், அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்க நான் தயாராக உள்ளேன். கேப்டன் கோஹ்லி மற்றும் அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்று கொள்வேன், நான் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்ற முடிவை அணி நிர்வாகத்திடமும், கோஹ்லியுடமுமே விட்டு விடுவேன். என்னை துவக்க வீரராக களமிறங்க சொன்னாலும் சரி, எனது இடத்தை மாற்றினாலும் சரி தான்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.