இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த அணி நிச்சயம் வெல்லும் என தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார் இந்திய ஜாம்பவான் கபில் தேவ்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்து அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி துவங்குகிறது. கூடுதல் சிறப்பாக முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அடிலெய்ட் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் வெறித்தனமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பல முன்னாள் வீரர்களும் வர்ணனையாளர்களும் எந்த அணி வெல்லும்? இதில் யார் சிறப்பாக செயல்படுவார்? எந்த பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவார்? என தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவ், முதல் டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெல்லும் என தனது கணிப்பை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சில புள்ளி விவரங்களையும் பேசியிருக்கிறார். கபில் தேவ் வெளியிட்ட கருத்தில்,
“இந்த டெஸ்ட் போட்டியில் நான் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என நினைக்கிறேன். இந்திய ரசிகர்கள் தவறாக என்ன வேண்டாம். ஏனெனில் மைதானம் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட அதிக அளவில் பிங்க் நிற பந்தில் விளையாடி இருக்கிறது. அதனால் இரவு நேரங்களில் பந்தின் செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கும் என அவர்கள் நன்கு அறிவர். அதனடிப்படையிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என நான் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்றார்.
இந்திய அணி இதுவரை ஒரே ஒரு பிங்க் நிற பந்து போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணி கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பிங்க் நிற பந்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை பலரது கணிப்பில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் பெரும்பாலும் வருகின்றன. இந்திய அணியிலும் அதற்கு ஏற்றார்போல இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் இருக்கின்றனர்.
இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை 16ஆம் தேதி மாலை வெளியிட இருப்பதாக அணி தலைவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் குறிப்பாக பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய மைதானங்களில் தங்களது பவுன்சர்கள் மற்றும் லென்த் பந்துகளை எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கபில்தேவ் சில அறிகுறிகளை தெரிவித்திருக்கிறார்.