இலங்கையை மீண்டும் துவம்சம் செய்த ஆஸ்திரேலியா; கழுவி ஊற்றும் இலங்கை ரசிகர்கள்
பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
கடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து வார்னர் சதம், பிஞ்ச், மேக்ஸ்வெல் அதிரடியில் இலங்கை வீரர்களை மைதானம் நெடுக ஓடவிட்ட மலிங்கா, இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் விக்கெட்டை டக்கில் இலங்கை கேப்டன் மலிங்காவிடம் இழந்தது. ஆனால் அதன் பிறகு வார்னர் 41 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களை அடிக்க, ஸ்டீவ் ஸ்மித் 36 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்க்க, இருவரும் நாட் அவுட்ட்டாக ஸ்கோரை 13 ஓவர்களில் 118/1 என்று எட்டி பெரிய வெற்றியைப் பெறச் செய்தனர்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி முதன் முதலாக இலங்கைக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மீதமுள்ள ஒரு போட்டி மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் ரன் அவுட் மூலம் முதல் அதிர்ச்சியளித்தார். தனுஷ்கா குணதிலகா (22) நன்றாக ஆடினார், ஒரு ஓவரில் ஸ்டான்லேக்கை சிக்சருடன் புரட்டி எடுத்தார், ஆனால் ஸ்டான்லேக் அவரை பவுல்டு செய்து பழிதீர்த்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 17 ரன்களில் ஆஷ்டன் ஆகரின் பந்தை மேலேறி வந்து தூக்கி அடித்து கமின்ஸ் கேட்சில் வெளியேறினார்.
அதன் பிறகு இலங்கை அணியின் நிலைமை மோசத்திலிருந்து படுமோசமானது. கமின்ஸ் பந்தில் நிரோஷன் டிக்வெல்லா (4) வெளியேற 5 பந்துகள் சென்று குசல் பெரேரா (27) ஆஷ்டம் ஆகர் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். தாசுன் ஷனகா 1 ரன்னில் ஸ்டான்லேக்கிடம் வெளியேற இலங்கை 75/6 என்று தடுமாறியது. வனிது ஹசரங்காவை 10 ரன்களில் ஆடம் ஸாம்பா அருமையான பிளைட்டட் பந்தில் வெளியேற்றினார். இசுரு உதனா டீப்பில் கேட்ச் ஆகி கமின்ஸின் 2வது விக்கெட்டாக வெளியேறினார்.
கேப்டன் மலிங்கா தன் பங்குக்கு 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஸாம்ப்பாவிடம் ஸ்டம்ப்டு ஆனார். சண்டகனை கமின்ஸ் ரன் அவுட் செய்ய இலங்கை இன்னிங்ஸ் 117 ரன்களில் முடிவுக்கு வந்தது.
ஏற்கெனவே முதல் போட்டியில் வெளுத்து வாங்கிய வார்னர் இந்தப் போட்டியிலும் அரைசதம் வெளுக்க, ஸ்மித் அனாயசமாக அரைசதம் அடிக்க 118 ரன்களை 1 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 13 ஒவர்களில் முடித்தது. தொடரை முதன் முறையாக இலங்கைக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் வென்றுள்ளது.
இதற்கு முன்பாக 2010, 2013, 2017-ம் ஆண்டுகளில் இலங்கைதான் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்றது. ஆட்ட நாயகனாக மீண்டும் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.