சும்மா பூச்சாண்டி காட்டாதீங்கடா… உண்மையான பயம் ஆஸ்திரேலிய அணிக்கு தான்; விரேந்திர சேவாக் அதிரடி பேச்சு
இந்திய அணியை இறுதி போட்டியில் எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி பயப்படும் என முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
50 ஓவர் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், இரண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கும் இடையேயான இறுதி போட்டியில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகமாக நிலவி வருவதால் முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், இந்திய அணியை இறுதி போட்டியில் எதிர்கொள்ளவதை நினைத்து ஆஸ்திரேலிய அணி பயத்தில் இருக்கும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரேந்திர சேவாக் பேசுகையில், “நிச்சயமாக இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இறுதி போட்டியில் இந்தியா போன்ற வலுவான அணியை எதிர்கொள்வதை நினைத்து ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக பயத்தில் தான் இருக்கும். இறுதி போட்டியில் இந்திய அணியை சந்திக்க நிலை மட்டும் வந்துவிட கூடாது என்றே ஆஸ்திரேலிய அணி நினைத்திருக்கும். ஆடுகளத்தின் தன்மை இறுதி போட்டியி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன். இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி நிச்சயமாக அதிக சவால் நிறைந்த போட்டியாகவே இருக்கும். எந்த அணிக்குமே வெற்றி மிக இலகுவாக கிடைத்துவிடாது. கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக விளையாடியது, இந்திய அணியும் சிறப்பாக விளையாடியே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது, ஆனால் இறுதி போட்டியில் எங்களை விட ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தியது. ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலிய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்” என்று தெரிவித்தார்.