இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோதுகிறது, இதில் ஒரு பிங்க் நிறப்பந்து பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்தியா ஒப்புக் கொண்டதை ஸ்டீவ் வாஹ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்
லாரஸ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ், இது தொடர்பாக கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆடுவது பெரிய விஷயம். இது அணிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பு, அது சிறந்ததொரு காட்சியாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆடிவிட்டால் அதை ஒருபோதும் மறக்க முடியாது.
வியத்தகு ஒரு சூழல் இங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இது ஒரு பெரிய சவால் நவீன கிரிக்கெட் உலகின் கிரேட் பிளேயர்களின் வாழ்க்கையில் இந்த ஒரு பத்தியையும் அவர்கள் நிரப்பத் தயாராகி விட்டார்கள்.
பகலிரவு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ, ஒரு சதம் எடுத்தாலோ அது வரலாற்றில் சிறப்பிடம் பெறும். இதை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும் ஒன்று சவால் அல்லது மிகக் கடினம் என்ற இரண்டு பார்வைகளே உண்டு. நிச்சயம் இந்திய அணி இதனைச் சவாலாக ஏற்றுக் கொண்டுள்ளது என்று கருதுகிறேன். இது உலகக் கிரிக்கெட்டுக்கு நல்லது, இந்தியா ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் ஆட ஒப்புக் கொண்டதை நான் வரவேற்கிறேன்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஒவ்வொரு பந்திலும் ஏதோ ஒன்று நடக்கும் என்பதால் பார்வையாளர்கள் கண்களை போட்டியிலிருந்து அகற்ற முடியாது.
இந்திய அணியில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர், ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆஸி. பவுலர்கள் சொல்லி வீழ்த்துவார்கள். ஆஸ்திரேலியாவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்திய அணியினால் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு ஒரு வியத்தகு சொத்து, அவர் தனித்துவமானவர், தனித்துவத் திறமை படைத்தவர். பும்ராவுக்கு கோச் இல்லாதது நல்லது, ஏனெனில் கோச் இருந்தால் நீ இன்னும் கொஞ்சம் வேகமாக ஒடி வர வேண்டும், இப்படி வீச வேண்டும், அப்படி வீச வேண்டும் என்று கூறிக்கொண்டேயிருப்பார்கள், ஆகவே பும்ராவை அவரது இயல்பான பவுலிங்குக்கு விட்டது நல்ல விஷயம்.
பும்ராவிடம் வேகம், துல்லியம், பலம் எல்லாம் உள்ளது. மிக முக்கியமாக அவரிடம் நிதானமும் உள்ளது. பும்ரா இருப்பது விராட் கோலியின் அதிர்ஷ்டம்.” என்றார் ஸ்டீவ் வாஹ்.