சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் எந்த ஒரு வீரரும் நிகழ்த்திராத சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை நிகழ்த்தியுள்ளார். இதற்காக இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 2007ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை டி20 கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருகின்றன.
விக்கெட்டுகள், அதிக ரன்கள் என தனித்தனியே நிகழ்த்தப்பட்டாலும், விக்கெட்டுகள் மற்றும் ரன் குவிப்பு இரண்டிலும் அசத்தி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனை எல்சி பெரி.
சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் என இரண்டையும் நிகழ்ச்சி வரலாற்று சாதனை பட்டியலில் வீரர்களையும் மிஞ்சி இடம் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் சேர்த்த எல்சி பெரி, சர்வதேச டி20 அரங்கில் 1000 ரன்கள் சேர்த்த வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். அதேபோல், கடந்த ஆண்டு இவர் டி20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை இந்த சாதனையை வேறு எந்த ஒரு வீரரும் நிகழ்த்தியதில்லை.
இதற்க்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷாஹித் அப்ரிடி சர்வதேச டி20 போட்டிகளில் 1416 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. அதற்க்கு அடுத்ததாக வங்கதேச ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் 1471 ரன்கள் மற்றும் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அப்ரிடி ஏற்கனவே அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த சாதனையை நிகழ்த்த சாகிப் அல் ஹசனுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.