எனது மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; மிட்செல் மார்ஷ் ஓபன் டாக்
ஆஸ்திரேலிய ரசிகர்களுக்குத் தன்னைப் பிடிக்காது, விரும்ப மாட்டார்கள் என்று மிட்செல் மார்ஷ் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் நேற்று ஓவல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரசிகர்கள் அன்பிற்குப் பாத்திரமாகும் நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ட்ராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக திடீரென கூடுதல் பவுலர் தேவை என்று டிம் பெய்ன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் எடுத்த முடிவு அபாரமாகக் கைகொடுத்தது.
ஓவலில் இவரது 4 விக்கெட்டுகளினால் இங்கிலாந்து நேற்று 170/3 என்பதிலிருந்து 226/8 என்று சரிவு கண்டது.
“பெரும்பாலான ஆஸ்திரேலிய ரசிகர்கள் என்னை வெறுக்கின்றனர். ஆஸ்திரேலியர்களுக்கு கிரிக்கெட் ஆட்டம் மீது அளவுகடந்த பற்றுதல் உண்டு, அதனால் ஒவ்வொருவரும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
உண்மைதான். எனக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டன, நான் அதனைச் சரியாக பற்றி கொள்ளவில்லை. ஆனால் இனி என்னை அவர்கள் மதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒருநாள் அவர்களது அன்பை நிச்சயம் வெல்வேன். கடந்த 5 மாதங்களாக மீண்டும் வாய்ப்பைப் பெற கடுமையாக உழைத்தேன். கடந்த ஆண்டு கிரிக்கெட் போல் இனி நமக்கு அமையக் கூடாது என்று நான் மனப்பூர்வமாக நினைத்தேன்.
என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன, நெருங்கிய நண்பன் தற்கொலை செய்து கொண்டதில் உடைந்து போனேன். இத்தகைய விஷயங்கள் என்னை லேசாக தடம்புரளச் செய்தன. என்னால் இதனைக் கையாள முடியாமல் இருந்தது.
ஆனால் மீண்டும் வந்து இப்படி ஆட முடிந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் மிட்செல் மார்ஷ்.