ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இலங்கை அணியில் சுரங்கா லக்மல் விளையாடவில்லை. சிரிவர்தனே இடம்பெற்றுள்ளார். காயமடைந்த நுவன் பிரதீப்பும் இன்று விளையாடுகிறார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் கோல்டர் நைலுக்குப் பதிலாக சேசன் பெஹ்ரென்டார்ஃப் இடம்பெற்றுள்ளார்.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, நடப்புத் தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் கண்டுள்ளது. கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் கண்டுள்ளது.
மேலும் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 96 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 60 போட்டிகளிலும், இலங்கை அணி 32 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் முடிவு காணப்படவில்லை.
புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-ம் இடத்திலும் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன.
ஆரம்பம் முதலே தொடக்க வீரர்களான வார்னரும் ஃபிஞ்சும் ஆதிக்கம் செலுத்தி ரன்கள் எடுத்தார்கள். இதனால் இலங்கை அணியின் பந்துவீச்சு முதலில் இருந்தே தடுமாற ஆரம்பித்தது. ஆஸி. அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. எனினும் ஃபிஞ்ச் போல வார்னரால் வேகமாக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. அவர் 48 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து டீ சில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த உஸ்மான் கவாஜா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு ஃபிஞ்சும் ஸ்மித்தும் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். ஃபிஞ்ச் இன்று அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டீ சில்வா வீசிய 29-வது ஓவரில், ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் ஃபிஞ்ச். பிறகு சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். 97 பந்துகளில் சதம் அடித்து ஆஸி. அணி 300 ரன்களுக்கும் அதிகமாக எடுப்பதற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கினார். சதம் அடித்த பிறகும் அவர் ஓயவில்லை. தொடர்ந்து ரன்கள் குவித்து 128 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.