வார்னருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வைத்த செல்லப்பெயர் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சக வீரர்கள் தனக்கு வைத்தச் செல்லப்பெயர் என்ன என்பது குறித்து ருசிகர பேட்டி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் எடுத்துள்ளார்.

நேற்று வங்காள தேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்களை வார்னர் குவித்தார். இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

2019 உலக கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இது குறித்து வார்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆதம் கில்கிறிஸ்டின் சாதனையை சமன் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை விட முக்கியமானது, புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 2 புள்ளிகள் முன்னேறி இருப்பதுதான்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் புதிய பந்துகளை எதிர்க்கொள்ளும் போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். மைதானத்தின் சூழலையும் கருத்தில் கொண்டுதான் ஆட வேண்டும்.

பிட்ச் மெதுவாக இருந்தது. அதனால் தொடக்கத்தில் நிதானமாக ஆடினோம். எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull’ (Humble- அமைதி Bull-காளை) என அழைக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் இப்படிச் செல்லமாக அழைக்கின்றனர். நான் வாழ்க்கையிலும், கிரிக்கெட்டிலும் கோபமாக நடந்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன்.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த ஆண்டு வார்னருக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

தடை காலம் முடிவடைந்து அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

வங்காள தேச அணிக்கெதிராக சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்துள்ளார் டேவிட் வார்னர்.

நாட்டிங்காமில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும்.

பின்னர் விளையாடிய வங்காள தேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்தது. இந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் சதம் (102 ரன்) அடித்தார்.

வங்காள தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார்.

இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர்.

Sathish Kumar:

This website uses cookies.