ஐபிஎல் தொடர் எங்கு? எப்போது துவங்கும்?.. பிசிசிஐ ஆலோசனை கூட்டம் இன்று!
இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்குவது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்திய அணி எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உடனான கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த தொடர்களை வோறொரு தேதியில் நடத்துவது குறித்தும், இந்திய அணியின் 2020/21 ஆண்டுக்கான போட்டிகளின் அட்டவணை குறித்தும் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அதன் செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் காணொளி மூலம் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 11 விதமான அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளதாக தெரிகின்றன.
குறிப்பாக, இந்திய மைதானங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடரை எங்கு எப்போது வைக்கலாம்? முன்னதாக பயிற்சிகள் எப்போது துவங்கலாம்? என்றும், ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளை உள்நாட்டில் எப்போது தொடங்கலாம்? எனவும் பேசப்படவுள்ளது.
கொரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால், பிசிசிஐ-க்கு போதுமான கால அவகாசம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆதலால், இந்த ஆண்டு ரஞ்சி போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிகிறது.
இதன் காரணமாக, விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, முஸ்தாக் அலி ஆகிய தொடர்களில் ஏதேனும் ஒன்று போதிய காலம் இல்லாததால் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டை சரிசெய்ய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை இப்படியே நீடித்தால் அதை வெளிநாட்டிற்கு மாற்றம் செய்யலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.