சிஎஸ்கே VS ஆர்சிபி: இப்படியொரு மோசமான அம்பயரிங்கை பார்த்ததில்லை!

கிரிக்கெட் போட்டிகளில் அம்பயர் தவறு செய்வது வாடிக்கை தான். இயல்பு தான். ஆளானப்பட்ட ஸ்டீவ் பக்னர் கூட ஒரே போட்டியில் 8 தவறான முடிவுகள் கொடுத்து, இந்திய அணியின் தோல்விக்கே காரணமாக இருந்தவர் தான். ஆக, மனிதத் தவறுகள் என்பது இயற்கை. ஆனால், நேற்று நடந்த சென்னை vs பெங்களூரு போட்டியில் அம்பயர் செய்தது தவறு இல்லை. அதுக்கும் மேல…

பெங்களூரு அணியின் 206 ரன்கள் இலக்கை சேஸிங் செய்துக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. களத்தில் நிற்பது தோனியும், ராயுடுவும். 13.6-வது பந்தை ராயுடுவுக்கு வீசுகிறார் பவன் நெகி. ஆஃப் சைடில் கோட்டிற்கு நேரே லேண்ட் ஆகும் பந்து, டர்ன் ஆகி கோட்டிற்கு வெளியே வைடாக சென்று விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் அடைகிறது. ஓரளவுக்கு கிரிக்கெட் ஞானம் உள்ள மூணாவது கிளாஸ் படிக்கும் பையன் கூட, அது வைட் பால் என்று சொல்லி விடுவான்.

ஆனால், அப்போது அம்பயரிங் செய்த விரேந்தர் ஷர்மா என்பவர், அது வைட் இல்லை என்று மறுத்துவிட்டார். எதுக்குமே அல்ட்டிக் கொள்ளாத தோனியே, சற்று டென்ஷனாகி அம்பயரிடம் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார். அம்பதி ராயுடு சொல்லவே வேண்டாம். மனுஷன் செம டென்ஷன் ஆகிட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில், இதுமட்டுமல்ல… அம்பயரிங்கில் ஏகப்பட்ட குழப்பங்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஐபிஎல் சேர்மேன் ராஜிவ் சுக்லா, மேட்ச் ரெஃப்ரீக்களிடம் பேசி, களத்தில் அம்பயர்களை மேலும் விழிப்புடன் இருக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்குள், இப்படியொரு மோசமான அம்பயரிங்.

கடந்த ஞாயிறன்று, ஹைதராபாத்தில் நடந்த சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னையின் 184 ரன்கள் சேஸிங்கை துரத்திய ஹைதராபாத் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியின் 17வது ஓவரை வீசிய ஷரதுள் தாகூர், வில்லியம்சனுக்கு ஹைட் நோ-பால் வீசினார். இதற்கு லெக் அம்பயர் நோ-பால் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், லெக் அம்பயர் வினீத் குல்கர்னி நோ-பால் கொடுக்கவில்லை. ஒருவேளை, அந்த பந்திற்கு நோ-பால் கொடுத்து இருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்புண்டு.

நடப்பு ஐபிஎல்-லில் அம்பயர்கள் தூங்குகிறார்களா? அல்லது வேறு ஒரு உலகத்துக்கு சென்று விடுகிறார்களா? என்று தெரியவில்லை. அதிலும், நேற்று வைட் கொடுக்காததெல்லாம், அம்பயரிங்கே அங்கு இல்லை எனலாம். இது லீக் மேட்ச், ஓகே… இறுதி போட்டியில் இந்த மாதிரி நடந்தால்….? கவனம் கொள்ளுமா ஐபிஎல் நிர்வாகம்?

Editor:

This website uses cookies.