பாகிஸ்தானுக்கு 2003/2004 ஆண்டு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அத்தொடரில் அனைவரையும் விஞ்சி ஹீரோவாக திகழ்ந்தவர் லக்ஷ்மிபதி பாலாஜி தான் என்று முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்த ஆறு வார கால சுற்றுப்பயணத்தில் வீரேந்திர சேவாக முச்சதம் விளாசினார். ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்தார். இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி பல சாதனைகள் அரங்கேற்றப்பட்டன. ஆனால், அங்கு அனைவரையும் மீறி லக்ஷ்மிபதி பாலாஜியை பாகிஸ்தானே கொண்டாடியது.
அந்த ஒரு குறிப்பிட்ட தொடரில், பாகிஸ்தானின் இம்ரான் கானை விட, லக்ஷ்மி பாலாஜி தான் அங்கு மிகவும் பிரபலமாக இருந்தார்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 160.71 என்ற ஸ்ட்ரைக் வீதத்தில் 45 ரன்கள் எடுத்தார் பாலாஜி, அவரது 45 ரன்களில் 36 ரன்கள் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளில் தான் எடுக்கப்பட்டது. (6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்). எகானமி 6க்குள் வைத்து, 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பாலாஜி. டெஸ்ட் தொடரில் இர்பான் பதானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்ச விக்கெட் எடுத்த வீரராக திகழ்ந்தார் பாலாஜி.
2003 மற்றும் 2012 க்கு இடையில் 8 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடிய பாலாஜி, 2003/04 பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தனது மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாகும் என்றும் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி அவ்வளவு பிரபலமாக காரணம் என்ன?
குறிப்பிட்ட அந்த ஒரு தொடரில் பாகிஸ்தானில் மட்டும் அவர் கொண்டாடப்படவில்லை. இந்தியாவிலும் அவர் கொண்டாடப்பட்டார். ஒல்லியான, உயரமான உடலமைப்பு கொண்ட பாலாஜியின் பவுலிங் ஸ்டைல் பொதுவாக அனைவரையும் கவர்ந்தது. அதிவேக பந்துவீச்சாளர் கிடையாது என்றாலும், அவரது பவுலிங் ஸ்டைல் அவர் வேகமாக வீசுவது போன்றே காட்டும்.
ஓடி வரும் போது, துள்ளிக் குதிக்கும் அவரது முடி, விக்கெட் எடுத்தால் அதை அவர் கொண்டாடும் விதம் என அனைத்தும், இந்திய ரசிகர்களும் சரி, பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, ரசித்தனர்.
எல்லாவற்றையும் தாண்டி அவரது சிரிப்பு. எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் அவரது முக அமைப்பு பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்தது என்றால் மிகையல்ல. கள்ளகபடமற்ற அந்த பெரிய தாடை கொண்ட அவரது சிரிப்புக்கு தான் பலரும் ரசிகர்களானார்கள். பாகிஸ்தானியரும் கூட.
அதிலும், ஒருநாள் போட்டியில் அக்தர் ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் பாலாஜி அடித்த சிக்ஸரை ரசிகர்கள் மறக்க முடியுமா என்ன!