தென் ஆப்ரிக்கா அணிக்கு இப்படி ஒரு நிலைமையா..? அயர்லாந்திடம் அசிங்கப்பட்ட தென் ஆப்ரிக்கா அணி !!

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அயர்லாந்தின் டப்லினில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு ஆண்டி பில்மர்ன் 102 ரன்களும், ஹரி டெக்டர் 79 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டாக்ரெல் 45 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்த அயர்லாந்து அணி 290 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜன்னமென் மாலன் 84 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் வாண்டர் டூசைனை (49) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அயர்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 48.3 ஓவரில் 247 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

அயர்லாந்து அணி சார்பில் மெக்பிரைன், அடைர் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்துவீசிய மற்ற அனைத்து வீரர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக பெற்றுள்ள முதல் வெற்றி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.