மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொழில்நுட்ப கோளாறுகளால் வெறுப்பான ரசிகர்கள்
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகமாக இருந்ததால் இந்திய ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்று உஸ்மான் காவாஜா ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 30 ஓவர்களை கடந்தும் விக்கெட்டை இழக்காததால், இந்திய ரசிகர்கள் மைதானத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து 31.5 ஓவரில் ஃபின்ச் 93 (99) ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த மேக்ஸ்வேல் அதிரடியாக விளையாடி 47 (31) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையே உஸ்மான் சதம் அடித்து 104 (113) ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த மார்ஸ் 7 (12) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து பீட்டர் ஹண்ட்ஸ்கோம் 0 (2) என ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி வரை விளையாடிய ஆல் ரவுண்டர் ஸ்டொயினிஸ் 31 (26) ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 314 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது, அதிகப்படியான தொழில்நுட்ப கோளாறுகள் நடந்ததால் இந்திய ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
பால் ட்ரேக்கிங் முறையை பரிசோதிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் தப்பித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதங்கங்களையும் இந்திய ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.