இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.
ரோகித் சர்மா டாஸ் சுண்ட, வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா ‘ஹெட்’ என அழைத்தார். அவர் அழைத்தபடி ‘ஹெட்’ விழ பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் குருணால் பாண்டியாவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக முகமது மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார்.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இந்திய இளம் வீரர் ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் அவ்வப்போது தடுமாறுகிறார். இது குறித்து இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, ‘ரிஷாப் பண்ட் 22 வயதான ஒரு இளம் வீரர். இப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க முயற்சிக்கிறார். அதற்குள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் குறித்து நிறைய விமர்சனம் செய்கிறார்கள். இது நியாயமல்ல. களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ? அதை சுதந்திரமாக செய்ய அனுமதிக்க வேண்டும். ரிஷாப் பண்ட் மீது அதிக கவனம் செலுத்துவதை தவிர்க்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவர் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு வீரர். அவர் களத்தில் எந்தவித நெருக்கடியும் இன்றி விளையாட வேண்டும் என்று நாங்கள் (அணி நிர்வாகம்) விரும்புகிறோம். நீங்கள் அவரை சிறிது காலம் கண்டு கொள்ளாமல்விட்டு விட்டால் போதும். அது அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரிடம் அபாரமான திறமை இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்றார்.
மேலும் ரோகித் சர்மா கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அருமையாக பந்து வீசினார். அதன் பிறகு இந்திய அணிக்குள் நுழைந்து ஒரு நாள் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன் அணியில் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது இந்த 20 ஓவர் தொடரில், மிடில் ஓவர்களில் எப்படி திறம்பட பந்து வீச முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். பேட்ஸ்மேன் எந்த மாதிரி விளையாட முயற்சிக்கிறார் என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கு ஏற்ப பந்து வீசுகிறார். அதனால் தான் அவரது பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவால் அளிக்கிறது. மிடில் ஓவர்களிலும் ஏன் ‘பவர்-பிளே’யில் கூட சிறப்பாக பந்து வீசுகிறார். கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு கூட தயங்குவது கிடையாது.’ என்றார்.