ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி முஸ்பிகுர் ரகிமின் சதத்தால் 49.3 ஓவர்களில் 261 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் களமிறங் கினர். முதல் ஓவரை வீசிய மலிங்கா கடைசி இரு பந்துகளிலும் விக்கெட்களை வீழ்த்தி வங்கதேச அணிக்கு நெருக்கடி கொடுத்தார். லிட்டன் தாஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் சிலிப் திசையில் நின்ற குசால் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஷகிப் அல்ஹசன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஸ்டெம்புகளை பறிகொடுத்தார்.
ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் முஸ்பிகுர் ரகிம் களமிறங்கினார். சுரங்கா லக்மல் வீசிய 2-வது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டை பலமாக தாக்கியது. இதனால் உடனடியாக களத்தில் இருந்து தமிம் இக்பால் வெளியேறினார்.
இதன் பின்னர் முஸ்பிகுர் ரகிமுடன் மொகமது மிதுன் இணைந்தார். மிதுன் ஒரு ரன் எடுத்த நிலையில் மிட் ஆன் திசை யில் கொடுத்த கேட்ச்சை மேத்யூஸ் தவறவிட்டார். லக்மல் வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தில்தான் வங்கதேச அணி முதல் பவுண்ட ரியை அடித்தது. இதனை லெக் திசை யில் முஸ்பிகுர் ரகிம் அடித்திருந் தார். நிதானமாக விளையாடிய அவர், 10 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த கேட்ச்சை ஸ்கொயர் லெக் திசையில் திலுருவன் பெரேரா கோட்டைவிட்டார். முதல் பவர் பிளேவில் வங்கதேச அணி 24 ரன்கள் சேர்த்தது.
அபோன்சோ வீசிய 11-வது ஓவ ரில் முஸ்பிகுர் ரகிம் பவுண்டரியும், லாங் ஆஃப் திசையில் மிதுன் சிக்ஸரும் விளாச அந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. திலுருவன் பெரேரா வீசிய 15-வது ஓவரின் கடைசி 3 பந்துகளிலும் மிதுன் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால் அணியின் ரன் விகிதம் சீராக உயரத் தொடங்கியது. தனஞ்ஜெயா டி சில்வா வீசிய 19-வது ஓவரில் முஸ்பிகுர் ரகிம் சிக்ஸர் விளாசி மிரளச் செய்தார். அதிரடியாக விளையாடிய மொகமது மிதுன் 52 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை கடந்தார்.
இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் வங்கதேச அணி 19.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த முஸ்பிகுர் ரகிம் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். சிறப்பாக பேட் செய்து வந்த மொகமது மிதுன் 68 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் மலிங்கா வீசிய பவுன்சர் பந்தை மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க முயன்ற போது திலுருவன் பெரேராவிடம் கேட்ச் ஆனது.
3-வது விக்கெட்டுக்கு முஸ்பிகுர் ரகிமுடன் இணைந்து மிதுன் 131 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து வங்கதேச அணி ஆட்டம் கண்டது. மஹ்முதுல்லா ரியாத் ஒரு ரன்னில் அபோன்சோ பந்திலும், மொசடக் ஹோசைன் ஒரு ரன்னில் மலிங்கா பந்திலும் நடையை கட்டினர். அவர்களை தொடர்ந்து மெகதி ஹசன் 15 ரன்னில் சுரங்கா லக்மல் பந்திலும், மோர்டசா (11), ரூபல் ஹோசைன் (2) ஆகியோர் தனஞ்ஜெயா டி சில்வா பந்திலும் வெளியேறினர். 67 ரன்கள் இடைவெளியில் வங்கதேச அணி 5 விக்கெட்களை பறிகொடுத்தது. எனினும் மறுமுனை யில் நிதானமாக விளையாடிய முஸ்பிகுர் ரகிம் 123 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது அவருக்கு 6-வது சதமாக அமைந்தது. கடைசி கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய முஸ்டாபிஸூர் ரஹ்மான் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப் போது சுமார் 3 ஓவர்கள் மீதம் இருந் தது. இதனால் ஏற்கெனவே காயம் கரணமாக வெளியேறியிருந்த தமிம் இக்பால் களமிறங்கினார்.
அவருக்கு ஸ்டிரைக் கொடுக் காமல் அதிரடியாக விளையாடிய முஸ்பிகுர் ரகிம், திஷாரா பெரேரா வீசிய 48-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். மேலும் திஷாரா பெரேரா வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் விளாசிய நிலையில் 3-வது பந்தில் லாங் ஆன் திசையில் நின்ற மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் முஸ்பிகுர் ரகிம். அவர், 150 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 144 ரன்கள் விளாசினார்.
முடிவில் வங்கதேச அணி 49.3 ஓவரில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தமிம் இக்பால் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்களும், தனஞ்ஜெயா டி சில்வா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதையடுத்து 262 ரன்கள் இலக்குடன் இலங்கை பேட் செய்ய தொடங்கியது.