2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் நுழையப் போகும் 4-ஆவது அணி நியூஸிலாந்தா அல்லது பாகிஸ்தானா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த மே 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. ரவுண்ட் ராபின் சுற்று முறையில் நடைபெறும் இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 9 ஆட்டங்களில் ஆடி வரும் நிலையில், உலகக் கோப்பை போட்டி தற்போது கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது.
வெளியேற்றப்பட்ட அணிகள்: இந்த உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இதுவரை வெளியேற்றப்பட்டன. ஒரு வெற்றி கூட பெறாத நிலையில் ஆப்கனும், அசத்தலாக ஆரம்பித்தாலும் தொடர் தோல்விகளால் மே.இ.தீவுகளும், மோசமான செயல்பாட்டால் 2-ஆவது அணியாக தென்னாப்பிரிக்காவும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வென்றதால், இலங்கையும், இந்தியாவிடம் தோற்றதால் வங்கதேசமும் வெளியேற்றப்பட்டன.
அரையிறுதியில் நுழைந்த 3 அணிகள்: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடனும், 2-ஆம் இடத்தில் உள்ள இந்தியா 13 புள்ளிகளுடனும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பின்னர் 3-ஆவது அணியாக இங்கிலாந்து 12 புள்ளிகளுடன் நுழைந்தது.
பட்டம் வெல்லும் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து, 3 தோல்விகளால் போட்டியில் இருந்தே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது பின்னர் இந்தியா, நியூஸிலாந்து அணிகளை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
சரிவு கண்ட நியூஸிலாந்து: இதனிடையே போட்டியின் தொடக்கம் முதலே 5 வெற்றிகளை குவித்து, பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்த நியூஸிலாந்து, அடுத்தடுத்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகள் தோல்வி கண்டதால், சரிவைக் கண்டது. தற்போது 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைய முடியுமா அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற திரிசங்கு நிலையில் உள்ளது.
அதே போல் பாகிஸ்தான் அணியும் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது. அந்த அணி வெள்ளிக்கிழமை கடைசி ஆட்டத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துடன் ஆடுகிறது. அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் உலக சாதனையுடன் கூடிய பிரம்மாண்டமான வெற்றியை பாகிஸ்தான் பெற வேண்டும்.
நியூஸிலாந்தின் ரன் சராசரி +0.175 ஆகவும், பாகிஸ்தானின் ரன் சராசரி -0.792 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 350 ரன்களை குவித்து, பின்னர் அந்த அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் 400 ரன்களை குவித்து, 316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.
சாத்தியமற்ற வெற்றி பெற முடியுமா என்ற பலத்த கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், டாஸில் வென்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதே நேரம் டாஸில் தோற்று பீல்டிங் செய்ய பணிக்கப்பட்டால், பாகிஸ்தானின் அரையிறுதி கனவு பொய்த்து விடும். ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில், அதன் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விடும். ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ள வங்கதேசம், கடைசி ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் என்பதற்காக போராடும் எனக் கருதப்படுகிறது.