ஒரு ரன்னில் உலக சாதனையை தவறவிட்ட நியூசிலாந்து வீரர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் நியூசிலாந்து அணியில் அதிரடி ஆட்டக்காரர் முன்ரோ வெறும் ஒரு ரன்னில் ஒரு சாதனையை தவறவிட்டுள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்து வாஷ் அவுட்டான நிலையில், தற்போது 3 டி. 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் டி.20 போட்டி வெல்லிங்டன்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முடலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் அஜாம் (41) மற்றும் ஹசன் அலி (23) ஆகியோர தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 105 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் முன்ரோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 15.5 ஓவரில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் 49 ரன்கள் எடுத்த முன்ரோ கடைசியாக ஒரு ரன் எடுப்பதற்குள் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டதால் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் சர்வதேச டி. 20 போட்டிகளில் தொடர்சியாக நான்கு அரைசதம் அடித்த வீரர் என்ற மெக்கல்லம் மற்றும் கெய்லின் சாதனையை சமன் செய்வதை வெறும் ஒரு ரன்னில் தவறவிட்டார்.