எங்கள பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா..? புதிய சிக்கலில் சீனியர் வீரர்
வீரர்களை ஸ்ட்ரைக்கிற்கு வழிநடத்திய அதே நேரத்தில் பிரபல செல்போன் நிறுவனத்துடன் வெளியிடப்படாத ஒரு பெரிய தொகைக்கான விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்ட வங்கதேச ஆல்ரவுண்டர் மீது ஒப்பந்த மீறல் நடவடிக்கை பாயும் என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.
வங்கதேச அணியின் முன்னாள் ஸ்பான்சரான கிராமின்போன் என்ற செல்போன் நிறுவனத்துடன் சொந்த ஸ்பான்சர் விளம்பர ஒப்பந்தத்தில் செவ்வாயன்று ஷாகிப் அல் ஹசன் கையெழுத்திட்டார்.
இதே சமயத்தில்தான் நல்ல சம்பளம் மற்றும் சில பயன்களை கோரி வீரர்கள் ஸ்ட்ரைக்கையும் வழிநடத்தினார் ஷாகிப் அல் ஹசன்.
இது வீரர்கள் ஒப்பந்த மீறலாகும், ஆகவே நடவடிக்கை நிச்சயம் உண்டு, போன் நிறுவனமும், ஷாகிபும் நஷ்ட ஈட்டை போர்டுக்குக் கட்டியாக வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் நஜ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
நார்வேயின் டெலிநாரின் பெரும்பங்கு கொண்ட கிராமின்போன் என்ற நிறுவனம் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக 2009-11 வரை இருந்தது.
இந்நிலையில் போட்டி நிறுவனம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அணி ஸ்பான்சர் ஒப்பந்தத்தை பெற்றதால் கிராமின்போன் நிறுவனம் சாமர்த்தியமாக வீரர்களை தனித்தனியாக விளம்பரதாரர்களாக்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதனால்தான் வங்கதேச வாரியம் இந்த தனிப்பட்ட ஒப்பந்தம் மேற்கொண்ட வீரர்களைத் தடை செய்து வந்தது, இப்போது ஒருபுறம் வீரர்கள் ஸ்ட்ரைக்கையும் தூண்டி விட்டு தான் மட்டும் தனிப்பட்ட ஸ்பான்சரில் இறங்கியுள்ளதாக ஷாகிப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் வீரர்கள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று தற்போது இந்தியத் தொடருக்காக பயிற்சி பெற்று வருகின்றனர்.