ஐபிஎல் டி.20 தொடரில் புதிதாக இரண்டு அணிகளை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் வரலாற்றில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியே அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அதற்கு அடுத்த இடத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையும் ஐபிஎல் தொடரை மேலும் மேறுகேற்றும் விதமாக இரண்டு புதிய அணிகளை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மொத்தம் 8 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில், தற்போது புதிதாக இரண்டு அணிகளை உருவாக்க இன்று நடைபெற்ற பிசிசிஐ.,யின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் நடந்த நிலையில், அதில் முக்கிய அம்சமாக இந்தக் கோரிக்கை கவனத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த பிசிசிஐ ஆர்வம் காட்டினாலும், புதிய வீரர்களை போட்டிக்கு தயார்படுத்துவது, புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்தல், வீரர்கள் ஏலம் ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததால் இந்த அணிகள் இணைப்பு என்பது 2022 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.