தமிழக வீரரை கவுரவிக்கும் பிசிசிஐ! இதற்காக முழு காரணம் இதுதான்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஸ்ரீகாந்திற்கு விருது ஒன்றை அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஸ்ரீகாந்த், இந்திய அணிக்காக 43 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். மேலும், 146 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஓய்விற்கு முன்பு வரை 6153 ரன்கள் எடுத்த இவர் 6 சதங்களையும் அடித்திருக்கிறார்.
அதிரடிக்கு பெயர்போன ஸ்ரீகாந்த் 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். குறிப்பாக, உலககோப்பையின் இறுதி ஆட்டத்தில் இவர் அதிக ரன்கள் எடுத்தவராக இருந்தார்.
1993ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இந்தியா ஏ அணிக்காக சில ஆண்டுகள் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். பின்னர், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நிர்ணயிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை தீவு செய்தவரும் இவரே. இந்திய அணி வென்ற இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையிலும் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததே.
இந்நிலையில், 2019ம் ஆண்டிற்கான கிரிக்கெட் துறை சார்ந்த சாதனையாளர்களுக்கான விருதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஜனவரி 12ம் தேதி வழங்க இருக்கிறது. அதில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளது.
அதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.