கரீபியன் பிரீமியர் லீக்-கில் கலந்துகொண்ட தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. டிரின்பாகோ அணியின் ஜெர்ஸி அணிந்து அவர் இருப்பதால், இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது.
இந்திய வீரர்கள், வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கவில்லை. யுவராஜ் சிங்குக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அங்கு ஏன் சென்றார் என்பது சர்ச்சையானது. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அனுமதி இன்றி அங்கு சென்றதால், உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில், தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இருக்கிறார். இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் தான், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.
இதுதொடர்பாக விளக்கம் தருமாறு கேட்டு பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி வெள்ளிக்கிழமை தினேஷ் கார்த்திக்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏன் உங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தினேஷ் கார்த்திக் பிசிசிஐயிடம் அனுமதி பெறவில்லை. ஒப்பந்தத்தின்படி ஐபிஎல் தவிர வேறு எந்த தனியார் லீக் போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள், போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் விஜய் ஹஸாரே போட்டி வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இப்பிரச்னை தொடர்பாக தினேஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரலாம் எனத் தெரிகிறது.