ஆஸி., மற்றும் நியூசி., அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, இம்முறை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத காரணத்தால், சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி வென்றது. இதற்கு பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி மரண அடி கொடுத்து தொடரை 1-1 என சமன் செய்தது.
இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நாளை மறுநாள் துவங்க உள்ள நிலையில், டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெற இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கும் அதன் பிறகு நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்குமான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
பேட்டிங் வரிசையில் அம்பத்தி ராயூடு, ஹிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக தோனி இடம்பெற்றுள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவும், கேதர் ஜாதவும் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர் வரிசையில் வழக்கமான வீரர்களுடன் முகமது ஷமி, கலீல் அஹமது ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர், அதே போல் ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள அதே வீரர்களே நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், கலீல் அஹமது. முகமது ஷமி.