சீனா நிறுவனத்திற்கு பிசிசிஐ ஆதரவு.. கடுப்பில் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ஸ்பான்சராக இருந்துவரும் சீன நிறுவனம் தொடருமா? என்கிற கேள்விக்கு பிசிசிஐ பதிலளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.
லடாக் எல்லையில் இந்தியா – சீனா ராணுவங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. சீன ராணுவம் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என்கிற செய்திகளும் வதந்திகளும் பரவி வருகின்றன.
இதற்கிடையில், இந்தியாவில் பலரால் சீன பொருட்களை இந்தியாவில் புறக்கணிப்போம் என்கிற போராட்டங்களும் துவங்கியுள்ளது. களத்தில் இறங்கியும், இணையதளம் வாயிலாகவும் இந்த போராட்டங்கள் வெகுவாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சர்’ உரிமத்தை சீன அலைபேசி நிறுவனமான விவோ நிறுவனம் ரூ. 2,199 கோடிக்கு வரும் 2022 வரை பெற்றுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு இந்தியா – சீனா இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் சீன பொருட்கள் மற்றும் ‘ஸ்பான்சர்’ நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் இந்திய மக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மக்களின் இந்த போராட்டத்தினால், விவோ நிறுவனத்தின் ஸ்பான்சர் உரிமத்தை பி.சி.சி.ஐ. விலக்கிக் கொள்ளுமா? என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரால் எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால், வெளியிட்ட தகவலில், “ரசிகர்கள் பலர் புரியாமல் பேசுவது போல இருக்கிறது. ஒரு சீன நிறுவனத்திடம் இருந்து ஸ்பான்சர் பெறுவதற்கும், சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சீன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும் போது, அவர்கள் இந்திய நுகர்வோரிடம் இருந்து பெறும் பணத்தில் ஒரு பங்கை பி.சி.சி.ஐ.-க்கு செலுத்துகிறார்கள்.
இதுதவிர அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு பி.சி.சி.ஐ. 42 சதவீத வரி செலுத்துகிறது. எனவே இது இந்தியாவுக்கான ஆதரவு மட்டுமே. சீனாவிற்க்கு அல்ல. ஒருவேளை நாங்கள், சீன நிறுவனத்திற்கு கிரிக்கெட் மைதானம் கட்ட ஒப்பந்தம் கொடுத்தால் அது சீன பொருளாதாரத்திற்கு உதவுவதாக அர்த்தம். எனவே இந்நிறுவனத்துடனான ஸ்பான்சர் ஒப்பந்தம் தொடரும்.” என்றார்.