அவரும் மனிதன் தானே… விதிமுறையை மீறிய ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவாக பேசிய முன்னாள் கேப்டன் !!

கொரோனா விதிமுறையை மீறியதால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ரிஷப் பண்டிற்கு முன்னாள் வீரர் கங்குலி ஆதரவாக பேசியுள்ளார்.

இங்கிலாந்திற்கு கடந்த மாதம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி, கடந்த மாதம் 18ம் தேதி நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் பங்கேற்றது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி துவங்க உள்ளதால், இந்திய அணி இங்கிலாந்திலேயே முகாமிட்டுள்ளது.

இதையடுத்து வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சில வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசித்தனர். இதற்கிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரி‌ஷப் பண்ட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அவர் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது நண்பர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

ரி‌ஷப் பண்ட், சமீபத்தில் யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து-ஜெர்மனி ஆட்டத்தை மைதானத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு இருந்தார். ரிஷப் பண்ட்டின் இந்த செயல் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் கொரோனா விதிமுறையை மீறி ஊர் சுற்றி, இந்திய அணிக்குள் கொரோனாவை கொண்டுவந்த ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ரிஷப் பண்ட்டின் இந்த செயல் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி, எப்பொழுதும் மாஸ்க்குடன் இருப்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி பேசுகையில், “இங்கிலாந்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளை நேரில் காண இந்திய வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதுமே மாஸ்க்குடனே இருப்பது இயலாத காரியம். விடுமுறையில் இருக்கும் இந்திய வீரர்கள் விளையாட்டு போட்டிகளை நேரில் காண சென்றதில் எந்த தவறும் இல்லை, அவர்கள் விதிமுறையை மீறவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் முதல் பயிற்சி போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக கே.எல் ராகுல் பயிற்சி போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.