பயிற்சியாளர் பதவிக்கு மல்லுக்கட்டும் முக்கிய தலைகள்; ஆனால் இவருக்கு தான் வாய்ப்பு அதிகம்
இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கு, பிசிசிஐ விண்ணப்பங்கள் கோரியுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பணியில் தொடர்வார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டு இருந்தார். உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியோடு இந்திய அணி வெளியேறிய நிலையில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.
இதுவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியாளர், பியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் ஏறக்குறைய 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2 ஆயிரம் விண்ணப்பங்களில் ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கர், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, பரத் அருண்,ஸ்ரீதர், ராபின் சிங், நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு புதிதானவர்கள்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்தனா பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்ற செய்தி வந்தநிலையில் அதில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.
பிசிசிஐக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் குறைவு மற்றும் கேப்டன் விராட் கோலியின் விருப்பம், அணியில் கடந்த 2 ஆண்டுகால செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் தொடர்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 2021-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் , ஆஸியில் சென்று டி20 உலகக்கோப்பை, ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடக்கிறது.