அடுத்ததாக நடக்கவிருக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணையில் புதிய மாற்றத்தை செய்திருக்கிறது பிசிசிஐ. இதற்கான அறிவிப்பை நேற்றைய தினம் வெளியிட்டது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது.
இதற்கு முன்பாக, உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு ஆடிய அனைத்து போட்டிகளையும் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் துவங்கும் மேற்கிந்திய தீவுகள் எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதேபோல் போட்டி நடைபெறும் நாள் மற்றும் மைதானம் குறித்து அட்டவணையும் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.
தற்போது அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதில் டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் நடக்க விருந்த 2வது டி20 போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல் டிசம்பர் 11ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்கவிருந்த 3வது டி20 போட்டி தற்போது மும்பை மைதானத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
புதிய அட்டவணையில் இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 6ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 11ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடக்கிறது.
டிசம்பர் 6ம் தேதி ‘பாபர் மசூதி இடிப்பு தினம்’ மற்றும் ‘அம்பேத்கரின் நினைவு தினம்’ என்பதால் மும்பை காவல்துறை இப்போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என தெரிவித்தது. இதன் காரணமாக தற்போது மைதானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.