பிசிசிஐ நிர்வாகிகளின் அனாவசிய அயல்நாட்டு பயணங்களை உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் கமிட்டி கேள்வி கேட்பதுதான் வழக்கம், ஆனால் இம்முறை பொருளாளர் அனிருத் சவுத்ரி, கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் பொதுமேலாளர், முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் பிரிட்டனுக்கு எந்த அடிப்படையில் செல்கிறார்? ஏன், எப்படி என்று கேள்விக்கணைகளை நிர்வாகிகள் கமிட்டிக்கு தொடுத்துள்ளார்.
குறிப்பாக 9 நாட்கள் யு.கே. பயணத்துக்கு 4,050 அமெரிக்க டாலர்கள் சபா கரீமுக்கு டியர்னெஸ் அலவன்ஸ் அனுமதிக்கப்பட்டது ஏன் என்றும் யு.கே. பயணத்திற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு சபா கரீமுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கரீமின் டியர்னெஸ் அலவன்ஸ் நாளொன்றுக்கு ரூ.30,000 ஆகும். இதில் தங்கும் விடுதி கட்டணம் அடங்காது.
இந்நிலையில் பொருளாளார் அனிருத் சவுத்ரி, நிர்வாகிகள் கமிட்டிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பிசிசிஐ செயலரின் பிரிட்டன் பயணத்தை ‘அதனால் எந்த ஒரு பயனும் இல்லை’ என்று நிர்வாகிகள் கமிட்டி மறுக்கும் வேளையில் இப்போது சபா கரீம் பயணம் மட்டும் மதிப்பு சேர்க்குமா? என்று இடைமறிப்புக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தாமஸ் குக் நிறுவனத்துக்கு என் கையெழுத்துடன் சபா கரீமுக்கு 4050 டாலர்கள் அன்னியச் செலாவணி அளிக்குமாறு எனக்கு மின்னஞ்சல் வந்தது. இது அவருக்கான டி.ஏ. தொகையாம். 9 நாட்கள் பயணத்துக்கு 4050 டாலர்கள் டி.ஏ.” என்று அவர் எழுதியுள்ளார்.
சபா கரீமுக்கான இந்தத் தொகையை தான் அனுமதித்தாலும் தனக்கு வினோத் ராயிடமும், டயானா எடுல்ஜியிடமும் கேட்க 4 முக்கியக் கேள்விகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
முதலில் அவர் யுகே செல்வதற்கான நோக்கம் மற்றும் முடிவு எடுக்கும் நடைமுறை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்ததா? அல்லது அனுமதிக்கு முன்னரே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நாம் இதனை தெரியப்படுத்தியுள்ளோம் ஆகிய ஆதரவு ஆவணங்கள்.
இரண்டாவதாக பயணத்துக்கான ஆவணங்களில் அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது, 3வது விஷயம் இதற்கு முன்னர் வேறு பணியாளர்கள் யு.கே.வுக்கு சமீபத்தில் சென்றுள்ளனரா என்ற விவகாரம்.
கடைசியாக அப்படி வேறு யாராவது சமீபத்தில் யு.கே சென்றார்கள் என்றால், அவர் செய்யாத வேலையை, பணியை சபா கரீம் செய்யவுள்ளாரா?
என்று 4 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார், ஆனால் நிர்வாகிகள் கமிட்டி, தன்னை கேள்வி ‘கேட்கக் கூடாது’ என்று கூறியிருந்தாலும் தனக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாலேயே கேட்கிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.
சமீபத்தில் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரிக்கு யு.கே. செல்வதை நிர்வாகிகள் கமிட்டி தடுத்துள்ள போது சபா கரீமுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பிசிசிஐ அன்னியச் செலாவணி விதிகளுக்குள் இருப்பதால் எச்சரிக்கைக்காக இந்த விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் அனிருத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.