பகல் இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் இந்தியா; ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியா – வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 7-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது போட்டி 10-ந்தேதி நாக்பூரிலும் நடக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ந்தேதி இந்தூரில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22-ந்தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் -இ ரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
பி.சி.சி.ஐ. இது தொடர்பாக வங்காளதேசத்திடம் பரிந்துரை செய்துள்ளது. வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் முதல் முறையாக பகல்- இரவு டெஸ்ட் நடைபெறும்.
இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு சேர்மன் அக்ரம்கான் கூறும்போது “இந்தியா – வங்காளதேச அணிகள் கொல்கத்தாவில் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியை பகல்-இரவாக நடத்த பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பான கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாளில் எங்களது முடிவை அறிவிப்போம்”என்றார்.
இந்தியாவில் இதுவரை பகல் – இரவு டெஸ்ட் நடைபெற்றது இல்லை. பி.சி.சி.ஐ.யின் பரிந்துரையை வங்காளதேசம் ஏற்றுக் கொண்டால் முதல் முறையாக நடைபெறும்.
பகல் – இரவு டெஸ்ட் போட்டி இந்தியா எப்போதும் விரும்பியது இல்லை. கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகல்-இரவு டெஸ்டை கொண்டு வர விரும்பினார். இதற்கு கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்ததாக கங்குலி சமீபத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்துதான் கொல்கத்தா டெஸ்டை பகல்-இரவாக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் முதல் முறையாக 2015 டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இதுவரை பகல்-இரவாக 11 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.