தோனி குறித்து தேர்வுக் குழுவினரின் கருத்தை அறிந்த பிறகே தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிக்க முடியும் என்று பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் உலகக் கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர். எனினும் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ளவருமான சவுரவ் கங்குலி தோனி நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதில், “வரும் 24ஆம் தேதி நான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை சந்திக்க உள்ளேன். அப்போது அவர்கள் தோனியின் நிலை குறித்து எடுத்துள்ள முடிவை தெரிந்துக் கொள்வேன். அதன்பின்னர் தான் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். மேலும் தோனியின் விருப்பத்தை அரிய அவரிடமும் பேச உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேர்வுக்குழுவின் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. சவுரவ் கங்குலி 23ஆம் தேதி பிசிசிஐ தலைவராக பதவி ஏற்க உள்ளதால் தற்போது இந்தக் கூட்டம் வரும் 24ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா-பங்களாதேஷ் இடையேயான டி20 தொடரிலும் தோனி பங்கேற்க வாய்ப்பு மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது குறிப்படத்தக்கது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கு பின்பு முதல் முறையாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றார். இதில்,“நானும் எல்லோரையும் போல ஒரு மனிதன் தான். எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களை விட கோபத்தை கட்டுபடுத்துவதில் சிறப்பாக இருப்பதால், எனது கோபம் வெளியே தெரியவதில்லை. நானும் சில நேரங்களில் வெறுப்பு அடைவேன். எனினும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிடுவேன். ஒரு பிரச்னையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடுவதையே நான் நினைப்பேன். அதுவே எனது உணர்ச்சிகளை கட்டுபடுத்துவதற்கான சிறப்பான வழியாக நான் கையாள்கிறேன்.
Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics
இந்தியர்கள் எப்போதும் அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால், நான் எனது உணர்ச்சிகளை கட்டுபாட்டில் வைக்க நினைப்பேன். ஏனென்றால் என்னுடைய உணர்ச்சிகள் கட்டுபாட்டில் இருந்தால் தான் என்னால் நல்ல முடிவிற்கான பாதைக்கு அடைய முடியும். முடிவை நினைத்து பணியாற்றினால் அது அதிக நெருக்கடியை தரும். ஆகவே நான் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன். என்னை பொருத்தவரை ஒரு அணியின் கேப்டன் என்பவர் மிகவும் நேர்மையானவராக இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.