கொம்பன் வந்துட்டான்… நியூசிலாந்திற்கு எதிராக மிரட்டல் சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்; உலகக்கோப்பையில் பெரிய பிரச்சனை இருக்கு
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் நான்கு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம்நிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜானி பாரிஸ்டோ டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோ ரூட் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மாலன் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு இலகுவாக ரன்னும் சேர்த்தது.
மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டேவிட் மாலன் 95 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காகவே அணிக்கு திரும்பி அழைக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ஒருநாள் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸிற்கு இது நான்காவது சதமாகும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்தவற்காகவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தனது ஓய்வு முடிவை திரும்பபெற்ற பென் ஸ்டோக்ஸ், தற்போது பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு சதமும் அடித்துள்ள இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.